(+44 208 333 1954)

muruhankovil@gmail.com

BLOG

Our Faith

ஆராய்ச்சிக் கட்டுரையாளர் - லண்டன் சுவாமி நாதன்

மரங்களுக்கு வணக்கம், நமஸ்காரம்!

இந்துக்கள் பூமியை வணங்கினர், உழக்கூடிய நிலத்தை வணங்கினர், நீர் நிலைகளை வணங்கினர் காடு மலைகளை வணங்கினர், செடி-கொடி-மரங்களை வணங்கினர், பறவைகள் ,மிருகங்களை வணங்கினர். இது எல்லாம் மூட நம்பிக்கைகளா? இல்லை. புறச் சூழல் என்பதை பயபக்தியுடன் அணுக வேண்டும் என்ற மனப் பரிபக்குவமே இந்த வழிபாட்டை ஏற்படுத்தியது.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்து பூமியில் காலடி வைக்கும் முன் அதனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு காலடி வைப்பர் (பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே). மரங்களை வெட்டும்போதும், கிணறு வெட்டும் போதும் இதே அணுகு முறையே. அதாவது உன்னை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். உன்னை பூண்டோடு அழிப்பது எங்கள் நோக்கமல்ல. எங்களைப் போலவே நீயும் சாஸ்வதமக இருக்கவேண்டும் என்பதே அவர்தம் கொள்கை! மேலும் எந்த மரம் செடி கொடிகளுக்கு மருத்துவப் பலன்கள் அதிகமோ அவை மேலும் அதிகமாகப் போற்றப்படுகின்றன. மருத்துவப் பலன் கருதி அவைகளை அழித்துவிடக் கூடாதென்பத ற்காக இப்படிப் புனிதத்துவம் ஊட்டினரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. சோம லதை என்னும் அபூர்வ, மனதைச் சுத்திப்படுத்தும், வேத கால மூலிகை அடியோடு அழிந்துவிட்டது! இந்த சோமக் கொடியைப் போற்றி வேதத்தில் ஏராளமான துதிகள் உள்ளன.(விவரங்களை எனது பழைய கட்டுரையில் காண்க)

பிள்ளை பெற அரச மர வழிபாடு Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship/

கீழ்கண்ட செய்யுட்களே இதற்குச் சான்று பகரும்:

அரசமர வழிபாடு

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே

அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:

அடியில் பிரம்மனும். நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் நிலைபெற்ற அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

அரச மர வழிபாடு வேதத்திலும், சிந்து சமவெளியிலும் காணப்படுகிறது.

துளசி வழிபாடு/

யந்மூலே சர்வ தீர்த்தானி யந்மத்ய சர்வதேவதா:

யதக்ரே சர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்

அடியில் எல்லா புண்யக்ஷேத்ரங்களும் , நடுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நுனியில் சகல வேதங்களும், நிலைபெற்ற ஒப்பற்ற துளசி தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்.தர்ப்பை வழிபாடு

குசமூலே ஸ்திதோ ப்ரம்மா குச மத்யே து கேசவ:

குசாக்ரே சங்கரம் வித்யாத் சர்வே தேவா: சமந்த இதி

தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சங்கரனும் இருக்கிறார்கள்.

தர்ப்பைகளின் தச வித (பத்து வித) புற்கள்:

குசா: காசா யவா தூர்வா கோதூமாஸ் சாத குந்துரா:

உசீரா வ்ரீஹ்யோ முஞ்சா தச தர்பாஸ்ச பல்பஜா:

குசம், நாணல், யவை, அருகு, கோதுமை, நீர்முத்தக் காசு (கோரை), வழல், நெற்பயிர், முஞ்சிப் புல், விச்வாமித்ரம் இவை பத்து வகை புற்கள் ஆகும்.

தர்ப்பையின் தேவர்கள் குஸாஸ்து ரௌத்ரா விக்ஞேயா கௌசம் ப்ராஹ்மம் ததா ஸ்ம்ருதம் ஆர்ஷந்து தௌர்வமாக்யாதம் வைஸ்வாமித்ரம் து வைஷ்ணவம்

இன்னன்ன தர்பைகளுக்கு இன்னன்ன தேவதைகள் என்பதை அறிக:

குசா: = ரௌத்ரர்கள்

கௌசம் = ப்ராம்மம்

தௌர்வம் = ஆர்ஷம்

வைஸ்வாமித்ரம் = வைஷ்ணவம்

இவை தவிர வில்வ அஷ்டகம், துளசி ஸ்தோத்திரம் என்ற துதிகளும் இருக்கின்றன.தர்ப்பை, துளசி, வில்வம் ஆகியவற்றை எந்த நேரத்தில், எப்படிப் பறிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகள் இருக்கின்றன. சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் கலைக் களஞ்சியமான அபிமான சிந்தாமணியில் இவற்றைக் காணலாம்.

மூவிதழ் கூவிளம் = வில்வம் படம்/

வில்வத்தின் மகிமை

வில்வத்தின் மகிமையை தமிழ் செய்யுட்களிலும் காணலாம்:

கூவிளம் ஒன்று சாத்தின் குலவு சாலோகமாகும் கூவிளம் இரண்டு சாத்தின் குலவு சாமீபமாகும் கூவிளம் மூன்று சாத்தின் குலவு சாரூபமாகும் கூவிளம் நான்கு சாத்தின் கூடுஞ் சாயுச்சந்தானே சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும் மூன்று சாத்தினால் அவன் உருப் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பர் பெரியோர்.

வில்வமே புனிதனாகும், விளம்பு வில்வத்தின் மிக்காம் வில்வமுள் சக்தியாகும், வில்வத்தின் கோடு வேதம் வில்வவேர் பதினோர் கோடி, வியனுத்திரரேயாகும் வில்வமேத்துநர்க்கே தேவர் மெய்வடிவுவாகுமன்றே பொருள்: பத்திரங்களில் வில்வம் சிவசொரூபம், மரத்தின் முட்கள் சக்தி சொரூபம், கிளைகள் வேதம், வேர் 11 கோடி ருத்திரர்கள், வில்வ மரத்தை வணங்குவோர் தெய்வ வடிவைப் பெறுவர்.

பஞ்ச வில்வம் எனப்படும் ஐந்து வில்வங்கள் வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பௌர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும் என்பர் சான்றோர்.

இலைகளைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதன் பெருமையை பகவத் கீதையில் (9—26) கண்ணபிரானும், புறநானூற்றில் (பாடல் 106) கபிலரும் செப்புவதை “புறநானூற்றில் பகவத் கீதை” என்ற கட்டுரையில் தந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் தலம் தோறும் ஒரு குறிப்பிட்ட மரம் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் 21 இலைகளால் பிள்ளையாரை பூஜிக்கிறோம், இதை எல்லாம் பார்க்கையில் தாவரங்களுக்கு தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவதை அறிய முடிகிறது